← Library

13ம் சந்தி மர்மங்கள் · 3

அடுத்த சம்பவம்

19 June 2021

கடந்த வாரம் 13ம் சந்தி மர்மங்களில்,

“நியூஸ் அலர்ட் - தற்கொலை செய்த பெண் உயிருடன் மீண்டார்.

ஹுவான் முகாம் சந்தியில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு உடல்களில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட பெண் உயிருடன் இருக்கிறார் என தகவல் வந்துள்ளது. ஆயினும் ஆட்டோ சாரதி உயிரிழந்த நிலையிலேயே மீட்கப்பட்டுள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது”.

இதனை வாசித்து திகைத்து போனவள், அதனை உடனே சொல்ல நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.

அவன் பாலத்தின் கரை மீது ஏறி பீடிக்கப்பட்டவன் போலே கீழே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

ஐயையோ என இவள் அலறினாள்..

அடுத்த சம்பவம்

அந்த சத்தம் கேட்டு திகைத்தவன் இவளைத் திரும்பி பார்த்தான், பார்த்தபடி ஏதோ சொல்ல வாயெடுத்தவன் உடனே நிமிர்ந்து மேலே பார்க்கிறான். இவன் அப்படி என்ன உற்றுப் பார்க்கிறான் என்று நினைத்தபடியே இவள் மேலே பார்த்தாள்.

அடுத்தநொடியே,

தட தட வென்ற சப்தத்துடன் இவள் தலைக்கு மேலிருந்து கறுப்பாக ஏதோ இவளை நோக்கி விழுவதைக் கவனித்தாள். இவளையறியாமலே கைகள் தலைக்கு மேலாக மூடிக்கொள்ள கண்ணை இறுக மூடிவிட்டாள்.

தட் தட் தட தத்ட்...

லேசாக கண்ணைத் திறந்தாள், அவளுக்கு முன்னால் சில வெளவால்கள் பறந்து செல்வதைக் கவனித்தாள். என்ன நடந்திருக்கும் என புரிந்தவள் தன் கைகளை தளர்த்தி சற்றே ஆசுவாசமடைந்தாள். அதற்குள் பாலத்தின் மற்றக் கரையில் இருந்து பைக் நின்ற நடுப்பகுதிக்கு அவன் வந்திருந்தான்.

“லூசா நீ ? இவளோ அமைதியா இருக்க இடத்துல இப்பிடிக் கத்தினா எல்லாருக்கும் கேக்காதா ? நாம வந்திருக்கதே, வர முடியாத இடத்துக்கு, நீயே கத்திப் போட்டுக் குடுத்துருவ போல”

“எதுக்கு சும்மா ஏசுற ? நீ பாட்டுக்கு இறங்கிப் போய் பால சைட்க்கு மேல ஏறி நின்னா எனக்கு பயம் புடிச்சுருச்சு, எங்க அந்த ஆட்டோக்காரன புடிச்ச ஆவி உன்னையும் புடிச்சிருச்சோன்னு”

“எந்த நேரமும் ஆவியும் பேயும், நீ கத்தின கத்துக்கு இந்நேரம் யாருக்காச்சும் கேட்டிருந்தா ? சீக்கிரம் வா, அந்த வீட்டை பாத்துட்டு போயிரலாம்.”

“வீட்டையா ? டேய் இப்பதான் அந்த பொண்ணு இன்னும் சாகலைனு நியூஸ் வந்திருக்கு, அது என்ன ஆவியோ தெரிலடா, வாடா வீட்டை போயிரலாம்டா”

“அந்த பொண்ணு உயிரோட இருக்காளா ? ஹேய் என்னடி பைத்தியம் முத்திரிச்சா உனக்கு ?”

எனக்கா ? டேய் சீனக்குரல் நியூஸ் அலெர்ட்டா.. நான் சொல்லல..

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே, இந்த சாலையின் வளைவு தொடங்கும் தூரத்தில் வாகன சத்தம் கேட்டது.

ஹேய் யாரோ வாறாங்க போல, இப்ப எங்க போய் ஒளியிறது நாம ?

இருவருக்கும் பயம் உச்சத்தை அடைந்தது. பிடிபட்டால் நிச்சயம் சிறைதான். அவன் சிறிதும் சிந்திக்கவில்லை. அவளை இழுத்துக் கொண்டு ஓடிஏ ஆரம்பித்தான். டேய், பைக் அ விட்டு போறமே என அவள் சொல்லவும்,

இப்பொழுது பைக்கை ஸ்டார்ட் செய்தால் சப்தம் கேட்டு வேறு பக்கம் செல்பவர்கள் இங்கே வரக்கூடும் என்பதால், பைக்கை ஒரு பக்கமாக விழுந்தது போல தள்ளி விட்டு விட்டு அவளை இழுத்துக் கொண்டு பாலத்தின் மற்ற கரையில் இருக்கும் பெரிய மரத்தை நோக்கி ஓடினான். மரத்துக்கு பின்னால் மறைந்து கொண்டார்கள்.

இருவரது மனமும் பக் பக் என்று அடித்துக் கொண்டது. ஒரு ஜீப் ரக வாகனம் இவர்களை நோக்கி வருவதற்கான சப்தம் கேட்டது. அந்த வாகனம் இங்கேதான் வருகிறது போலவே என சிந்திக்க ஆரம்பித்தான். பயம் முற்றிலுமாக ஊறிக்கொண்டது. அவள் வந்த அழுகையை அடக்ககிக் கொண்டு இவன் நெஞ்சில் முகத்தை புதைத்து நின்றாள். இருவருக்கும் வெகுவாக மூச்சு வாங்கியது.

அந்த ஜீப் பாலத்தின் மீது வந்தது. அதன் வெளிச்சம் இவர்கள் ஒளிந்திருக்கும் மரம் வரை பட்டது.

“டேய் இங்க ஒரு பைக் இருக்குடா, இது என்னானு பாரு” ஒரு தடித்த குரல் கேட்டது.

சீன போலீசை எதிர்பார்த்து நின்றவர்களுக்கு, தமிழில் பேசும் யாரோ ஒருவர் வந்திருக்கிறார்கள் என்பது இன்னும் குழப்பத்தை உண்டு பண்ணியது. யாரிவர்கள் ? என்ன செய்கிறார்கள் ? அதற்கு முந்தி இவர்களிடமிருந்து எப்படி தப்பிப்பது ? எதற்கும் யாரேனும் முன்னே வந்தால் உடனே வீசி அடிப்பதற்கு என குனிந்து ஒரு கல்லை பொறுக்கிக் கொண்டான்.

“பைக்ல ஏதும் பெருசா சேதாரம் மாதிரி தெரியல, யாராச்சும் தூள் பார்ட்டி பள்ளத்துல நிக்கிறானா இருக்கணும். இரு பாக்கிறன்” என்று சொல்லி விட்டு அந்த குரலுக்குரியவன், எங்கோ நடந்து சென்றான் போலும். நடக்கும் காலடி சப்தங்கள் கேட்டன.

“இந்த பக்கம் இல்ல, இரு மத்தப் பக்கம் பார்க்கிறன்” என்று விட்டு நடக்க, அதுக்கெல்லாம் நேரமில்லை வா. போலீஸ் வந்தா மாட்டிக்குவம். சீக்கிரமா போகணும், என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே,

ஏய் ஏய் என்று பெரிய சப்தமாக தூரத்தில் யாரோ கத்துவது கேட்டது.

டேய் டேய், போலீசுடா. அப்பவே சொன்னேன்ல ஹெட்லைட் போடலாமா வான்னு இப்ப பாரு என்று ஒருவன் கத்தினான். இந்த லேன் ல நாம புடிபட்டா காரியமே கெட்டு போயிரும். வேண்டிய ரிவர்ஸ் எடு சீக்கிரம் அவனை அப்டியே அடிச்சு போட்டுட்டு ஓடிரலாம்”.

நடக்கும் விஷயங்களை மற்ற பக்கமாக எட்டிப் பார்க்க எண்ணி சிறிதாக இவன் தலையை வெளி நீட்டினான். ஒரே ஒரு சீனப் போலீஸ் தனியாக துப்பாக்கியை நீட்டியபடி ஓடி வந்து கொண்டிருந்தான். ஜீப்பில் முகமூடி அணிந்த 3 இளைஞர்கள், ஜீப்பை வேகமாக பின்னோக்கி ரிவர்ஸ் எடுக்க தொடங்கியிருந்தனர்.

ஜீப் தன்னை நோக்கி வருவதைப் பார்த்த போலீஸ் கண்ணை நீட்டி ஏதோ சீன பாஷையில் கத்தி கொண்டிருந்தான். அவனது துப்பாக்கி ட்ரிக்கரை அவன் அழுத்த முனைந்த போது,

சக்…

அவன் தோள்பட்டையில் ஒரு கத்தி பாய்ந்தது. திணறியவன் சுதாகரிக்க முன்னமே அவனை அந்த ஜீப் மோதி தள்ளியது. வீசப்பட்டு போய் விழுந்தான். அடுத்த நொடியே வண்டியிலிருந்து இறங்கிய ஒரு இளைஞன் அந்த போலீஸை மோசமாக தாக்குகிறான் என தெரிந்தது. உடனே இறங்கிய இன்னொருவன் போலீசின் கால்களை பிடிக்க இரண்டு பேருமாக அவனை நீரோடைக்குள் வீசினர்.

இந்த கோர காட்சிகளை பார்த்து மிரண்டு போனவன் தன்னுடன் நிற்பவளைப் பார்த்தான். கண்கள் கலங்கி பீதியில் அவள் குறுகி நின்றாள். உன்னைநான் இங்கே கூட்டி வந்திருக்கக் கூடாது என மனதுக்குள் வருந்தினான். போலீசை ஒரு வழி செய்தவர்கள் அப்படியே வாகனத்தை ரேவர்சிலியே கொண்டு சென்று ஒரு குறிப்பிட்ட இடத்தில் திருப்பினார்கள்.

அந்த இடத்தில் இன்னொரு சந்தி வந்து இணைவதை இப்போதுதான் இவன் கண்டான். அந்த சந்தி வழியாகத்தான் போலீஸ் வந்திருக்க வேண்டும் என சுதாகரித்தான். அந்த வாகனம் அதே வேகத்தில் போக ஆரம்பித்தது. அப்போது, போலீஸீன் வாக்கி டாக்கி சப்தம் கேட்டது. இவன் மெதுவாக அவளை பிடித்தான்.

என்னடா இது, நெனச்ச மாதிரி அடிச்சு போடுறாங்க ? என அழுது கொண்டே புலம்பினாள்.

இங்க பாரு, நீ சொல்றதெல்லாம் சரி. ஆனா, இப்ப நாம இருக்க இடத்துல நல்லதுதான் நடந்திருக்கு. இன்னும் பிரச்சனை முடியல.

இவங்க செஞ்ச வேலையால இப்ப போலீஸ் இந்த லேனுக்கும் வரும். நாம இப்ப வெளிய போக ட்ரை பண்ணா கண்டிப்பா மாட்டிப்போம். சீக்கிரம் வா நாம ஒளிஞ்சுக்க இடம் தேடணும். சீக்கிரம் வாமா என்றான்.

அவளுக்கும் அந்த நேரத்தில் எந்த முரண்பாடுகளையும் பரிதாபத்தையும் விட, தப்பிப்பதே முக்கியம் என தோன்றியது. விரைந்து வந்து பைக்கில் ஏறி அதை மெதுவாக ஸ்டார்ட் செய்து சந்திக்குள் தொடர்ந்து சென்றான்.

டேய் தப்பிக்க ஏன்டா இந்த பக்கம் போற ? வெளில போகலாம்ல.

மத்தப் பக்கம் போனா கண்டிப்பா போலீஸ் வரும். இந்தப் பக்கமா சுத்தி போக ஏதாச்சும் வழியிருக்கானு பார்க்கலாம். என்றபடி விரைந்தான்

1 நிமிடம் உள்ளே சென்றதும், கண்ணுக்கு எட்டும் தூரத்திலேயே அவன் எடுத்த முடிவு தவறு என தோன்றியது. ஒரு 15 அடி சுவர் சந்தியை முடித்திருந்தது.

ஷிக்.. இங்கருந்து வழியே இல்லை.. பின்னாலதான் போகணும்.

அங்கிருந்து திரும்புவோம் என நினைத்து பைக்கை கால்களால் உருட்டி உருட்டி ரிவர்ஸ் எடுத்தான். அப்பொழுதே,

பியூவ்வ்வ்…பியூவ்வ்வ்…பியூவ்வ்வ்…

போலீஸ் வண்டி நிச்சயம் பாலத்துக்கருகில் வந்திருக்கிறது. அங்கே போலீசின் உடைமைகள் கிடப்பதால் நிச்சயம் இங்கே வர நேரமாகும். அதற்குள் எங்கு ஒளிவது என்று யோசித்தான்.

“Crime scene Do not Enter // Crime scene Do not Enter //Crime scene Do not Enter //”

இந்த வீடுதான். நிச்சயம் இங்க இப்ப யாரும் இருக்க மாட்டாங்க.

சீக்கிரம், இறங்கு இறங்கு.

அவளும் எந்த கேள்வியும் இல்லாமல் இறங்கினாள்.

இந்த பைக்கை புடி.

இருவருமாக இழுத்துச் சென்று வீட்டு சுவருக்கும் முட்டு சந்து சுவருக்கும் இடையில் இருந்த இடைவெளிக்குள் பைக்கை தள்ளினார்கள். அருகிலிருந்த உடைந்த பழைய கதவை அந்த இடத்தை மறைக்க தூக்கி வைத்தார்கள். பின்னர் அந்த ஒராள் மட்டுமே நிக்கக் கூடிய அகலத்தில் இருவரும் ஒருவர் பின் ஒருவராக தத்தி தத்தி நடந்தார்கள்.

அவன் அவள் கையை பிடித்துக் கொண்டு அந்த வீட்டுக்குள் செல்ல எங்காவது வழி இருக்கிறதா என்று பார்த்தான். இல்லாவிட்டால் இந்த இடைவெளிக்குளேயே ஒளிவது நல்லது என நினைத்து அந்த முடிவை எடுத்திருந்தான்.

ஆனால், அவர்கள் அதிர்ஷ்டம் அல்லது துரதிர்ஷ்டம், அந்த வீட்டு கிட்சனின் ஊடாக காற்றுக்காக வைத்திருந்த ஜன்னல், எந்த கம்பிகளுமில்லாமல் உடைந்த நிலையில் திறந்திருந்தது.

வா, வீட்டுக்குள் போகலாம், என அவன் சொன்னான். தனக்கு வேறெந்த வழியுமில்லை என உணர்ந்தவள் சரி என்றாள். இவன் சற்றே தூக்கிக் கொடுக்க உடலை வளைத்து நெளித்து ஒரு மாதிரியாக அந்த ஜன்னலுக்குள்ளால் அவள் உள்ளே சென்றாள். கிட்சன் பொருட்கள் வைக்கும் கட்டு ஒன்றில் இறங்கிய அவள், மீண்டும் பின்னால் திரும்பி அவன் வருவதற்காக பார்த்தாள்.கைகளால் முழு சக்தியையும் கொடுத்து அவன் முழங்கைகளை ஜன்னலுக்குளாக வைத்து அவன் தலை வரை மேலே தூக்கி விட்டான்.

அடுத்த அடி வைத்து அவன் அவள் உள்ளே வந்தான். வந்து இவளிருக்கும் கட்டிலியே இறங்கினான். இருவரும் கைகளில் ஏற்பட்ட சிராய்ப்புகளை பார்த்துக்கொண்டிருக்கும்போதே, அந்த கும்மிருட்டு வீட்டுக்குள் தனது போன் டார்ச் லைட்டை ஒன் செய்தாள். கீழே இறங்குவதற்காக கீழே லைட்டை அடித்தபொழுது…

மர்மங்கள் தொடரும்…