← Library

13ம் சந்தி மர்மங்கள் · 2

13ம் சந்தி

12 June 2021

கடந்த வாரம் 13ம் சந்தி மர்மங்களில்,

அடைமழைக்குள் அசைய வழியின்றி வந்து சேர்ந்த வீட்டில் உதவி கேட்கவென அழைப்பு மணியை அடித்தாள்.

ஒரு பெண்மணி வந்து கதவை திறந்தாள்……

“தொடரும் 13 ஆம் சந்தி மர்மங்கள். ஹுவான் முகாம் சந்தி 13 இல் உள்ள பாலத்தில் ஆளில்லாமல் கிடந்த ஆட்டோ, ஓடைக்குள் ஆட்டோவின் சாரதி உடல் மீட்பு. 500 மீட்டர் தொலைவிலேயே, தற்கொலை விசாரணைக்காக பூட்டியிருக்கும் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பக்கத்து தெருவில் வசிக்கும் இளம்பெண் சடலமாக மீட்பு”

13ம் சந்தி

ஹ்ம்…. தொடர்ந்து வாசிக்க 8ம் பக்கத்துக்கு

செல்க… வா ? சரி செல்வோம்..

‘இதற்கு முன்னும் 27 வயது மதிக்கத்தக்க இளம்பெண் தற்கொலை முயற்சியில் இதே வீட்டில் கையை வெட்டிய நிலையில் மீட்கப்பட்டார். மரணத்தின் காரணம் கையை வெட்டியதல்ல எனவும், அவரது உடல் மரணிக்கும் பொழுது இயல்பாக இருக்கவில்லை எனவும் கண்டுபிடிக்கப்பட்டதோடு மேலும் விசாரணைகள் தொடர்ந்து வருகின்ற இந்நிலையிலேயே ஒரே இரவில் பாலத்தடியிலும் வீட்டுக்குள்ளும் என இரண்டு உடல்கள் இதே தெருவில் மீட்கப்பட்டது போலீசாரை உலுக்கியுள்ளது. தூக்கில் தொங்கிய பெண் எதற்காக இந்த வீட்டை தேடி வந்தார் என்பதும், ஆட்டோ சாரதி ஏன் ஆட்டோவை பாலத்தில் இழந்து சகதி ஆற்றுக்குள் கிடந்தார் என்பதும் மேலும் சந்தேகங்களை கூட்டுகிறது. சீன - இலங்கை பொலிஸ் உறவு அத்தியட்சகர் சின் மா உன் கருத்துப்படி, ப்ளா ப்ளா பிளா ப்ளா…

ஏன் என்னாச்சு ? ஒழுங்காதானே வாசிச்சுட்டுருந்த ?

அவன் என்ன சொல்லி இருக்கான், இது உங்களுடைய பழைய கிரீஸ் யக்கா (இலங்கையில் மிகவும் பிரபலமடைந்த கொலைக்கும்பல்) வேலைதான். சீன மக்களை பாதிக்காத வரை இவற்றுக்குள் நாங்க தலையிட மாட்டோம். அப்படி ஏதோதான் போட்டிருக்கு. இங்க இருக்க வரைக்கும் உயிருக்கு உத்தரவாதமில்லை டா.

சரி அவன் சொல்றத விடு. எப்படியும் போலீஸ் இந்த மாதிரி விஷயங்களை இனிக் கணக்கெடுக்காது. நம்மளும் விட்டுட்டு பேசாம இருக்கலாம்.

என்ன ? விடப் போறீயா ? டேய் அந்த ரெண்டு பொண்ணுங்க லிஸ்ட்ல அடுத்தது நானா கூட இருக்கலாம் டா. அது மட்டுமில்லாம நீ ஒரு பொறுப்புள்ள ஜர்னலிஸ்ட் (ஊடகவியலாளர்),

“அரசாங்கத்தால விரும்பப்படாத ஜர்னலிஸ்ட் ”

ஏதோ, ஜர்னலிஸ்ட் தானே. இந்த மாதிரி விஷயங்களை நாமளே சும்மா விட்டா உண்மைய யாருடா கண்டு பிடிக்கிறது ?

நீயே கண்டுபிடி. அந்த நியூஸ் பேப்பரை தா, காலைல வந்த நியூஸ பின்னேரம் 6 மணிக்கு வாசிச்சுகிட்டு….

ஹேய்.

என்ன ?

இந்த பொண்ணு.

ஆமா, இவதான் தூக்கில தொங்கி இருக்கா, ஹினோவாக் வாக்சின் சென்டர்ல அக்கவுண்டண்ட்னு போட்டிருக்கு.

இல்ல, இல்ல…. இவ ஜர்னலிஸ்ட். சீனக் குரல் பேப்பர்ல ட்ரான்ஸ்லேஷன் அண்ட் ஸ்க்ரிப்ட்க்கு பொறுப்பா இருந்தா. கடான் முடான்னு கேள்வி கேப்பா.. நான் இவள இதுக்கு முன்னால நியூஸ் மீட்டிங்ஸ்ல கண்டிருக்கேன். இவள் ஏன் ?

நியூஸ்ல போட்டிருக்குல, அவ தேடி போனானு. கண்டிப்பா இதெல்லாம் ஆவிகளோட வேலைதான், அந்த ஹுவான் முகாம் 13ம் சந்தி இதுக்கு முன்ன சீன வெளியேற்ற போராட்டம் நடந்த இடம். கிட்டத்தட்ட 300 பேர் செத்துக் கிடந்த இடம். அங்க இருக்குற மரங்கள்ல கூட செத்தவங்களோட இரத்தம் ஊறி இருக்குனு சொல்வாங்க.

ஹேய் பேயெல்லாம் இருக்காது. இதுக்கு பின்னால கண்டிப்பா ஏதாச்சும் பாட்டர்ன் இருக்கும். அத கண்டுபிடிச்சா சரி. நாம இதை follow அப் பண்ணலாம் வா புறப்படலாம்.

புறப்படலாமா ? எங்க ?

13ம் லேன்க்குத்தான், என்ன நடந்திருக்குனு பார்க்க வேணாமா ?

எது அங்கயா ? டேய்.

வா... வா…

இரண்டு பேரும் புறப்பட்டு, அவனுடைய மோட்டார் சைக்கிளில் ஏறினார்கள்.

(போகும் வழியில்..)

“போலீஸ் கண்ணுல படாம தப்பிக்கிறதான் கஷ்டமா இருக்கப் போகுது”

போலீஸா ? அங்க எல்லாம் இந்த நேரத்துல ஈ, காக்கா கூட இருக்காதுடா. என்ன அநியாயமெல்லாம் நடக்குதோ அந்த இடத்துல. உன்ன நம்பி அங்க வர்னே நானும்.

ஆள் இருக்காதா ?? சூப்பர்…

பைக்கை முறுக்கினான்…. வ்ரூம்….

“இந்தா போட்ருக்கே 13ம் சந்தினு. போலாம்” என்றபடி வண்டியை அப்பாதைக்குள் ஓட்டினான். பொலிஸார் இருந்தால் அவர்களின் கவனத்தை ஈர்க்காமல் இருக்க வேண்டி, ஹெட்லைட்டை நிறுத்தினான்.

அடர்ந்த இலைகளுக்குள்ளாக இருண்ட வானத்தில் சிறிது ஒளியை தூவிக்கொண்டிருந்த நிலவுக்கு கூட புக முடியவில்லை. அந்த இடம் மக்கள் பயன்பாடின்றி போயிருந்து பின்னர் மீண்டும் மக்கள் அதிகுறைந்த விலையில் கிடைக்கும் நிலங்களுக்காக குடியேறிய இடங்கள். பெரிதாக வீடுகள் இல்லை. சந்திக்கு ஐந்தாறு வீடுகளில் தான் ஆட்கள் இருப்பர், அதிலும் குடும்பங்களாக இருப்பது மிகக்குறைவு. அரசாங்கங்கள் நடைபெற்ற யுத்தங்களுக்கு பிறகு ஒரு புதுப்பிப்பையும் செய்யாமல் இருந்தால் அந்த இரத்தக் கறையோடே ஊறி இருந்தன அப்பாதைகள்.

அங்கிருந்த குளிரும் அமைதியும் இவளை நடுநடுங்க செய்தன.

எப்படிடா இந்த மாதிரி இடத்துக்குள்ள வாழுறாங்க ? என புலம்பினாள்.

பாலத்துக்கு அருகில் வந்தார்கள்.

“இந்த பாலம்தான் ”

இருபுறமும் ஓடும் அழுக்கு நீரோடையின் தேங்கிய மண்ணில் வளர்ந்திருந்த மரங்கள் இரண்டு அடர்ந்து நீண்டு ஒன்றை ஒன்று கோர்த்தபடி பாலத்துக்கு மேலாக கூரை செய்திருந்தது. அழுகிய நீரின் வாடை மனித இரத்தத்தின் மணம் சேர்ந்து பயமூட்டுவதாய் வீசியது. அந்த பாலத்தில் ஆட்டோ நின்றிருக்க கூடிய இடத்தை சுற்றி வெள்ளைக் கோடு கீறி இருந்தது.

அந்த இடத்துக்கு வருவதற்காய், பாலத்தின் மீது மெதுவாக பைக்கை ஓட்டி வந்தான்.

ப்யிய்ஷ்க்…

பைக் திடீரென நின்றது. ஆட்டோவுக்கான வெள்ளைக் கோடுகள் போட்டிருந்த அதே இடம். இருவருக்கும் திக்கென்றது. ஏற்கனவே இருந்த பயத்தில் காதெல்லாம் ஒருமாதிரி அடைத்தது. கண்கள் சொக்கிடுவது போல உணர்ந்தான்.

ஆஹ…

டேய், டேய்.. குரல் கேட்டு சுய நினைவுக்கு வந்தான்.

டேய் வண்டிய எடுடா… என்னமோ எல்லாம் செய்துடா இந்த இடத்துல…

வண்டியை மீண்டும் ஸ்டார்ட் செய்வதுக்கு பதிலாக, அதனை விட்டு இறங்கி பாலத்தின் கரையை நோக்கி நடந்தான்.

இவன் என்ன செய்றான் ? அந்த ஆட்டோக்காரன் மாதிரி இவனையும் பேய் இழுத்துட்டு போகுதோ, என நினைத்தவளுக்கு உடம்பெல்லாம் சில்லிட்டது.

கூப்பிடவும் திராணியற்று அவன் செய்வதை பார்த்துக் கொண்டிருந்தாள். பாலத்தின் கரைக்கு சென்றவன், அங்கிருந்த கரை மீது கையை வைத்து நீரோடையைப் பார்த்தான்.

இவளுக்கு அந்த நேரமாக பார்த்து தொலைபேசிக்கு ஒரு மெசேஜ் வந்தது. எடுத்துக் பார்த்தாள்.

“நியூஸ் அலர்ட் - தற்கொலை செய்த பெண் உயிருடன் மீண்டார்.

ஹுவான் முகாம் சந்தியில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு உடல்களில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட பெண் உயிருடன் இருக்கிறார் என தகவல் வந்துள்ளது. ஆயினும் ஆட்டோ சாரதி உயிரிழந்த நிலையிலேயே மீட்கப்பட்டுள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது”.

இதனை வாசித்து திகைத்து போனவள், அதனை உடனே சொல்ல நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.

அவன் பாலத்தின் கரை மீது ஏறி பீடிக்கப்பட்டவன் போலே கீழே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

ஐயையோ என இவள் அலறினாள்..

மர்மங்கள் தொடரும்....