← Library

13ம் சந்தி மர்மங்கள் · 1

த்ரி(ல்) வீலர்

6 June 2021

அது மாலை 5.30 மணிதான், ஆனாலும் அடைமழைக்கு தயாராக வானம் இரவு போலிருந்தது. அடிக்கப் போகும் புயலுக்கு சாட்சியாக இடியும் மின்னலும் காதைப் பிளந்தன. அன்றிலிருந்து அவள் வீட்டிலிருந்தே வேலை செய்யலாம் எனச் சொன்னதால் கம்பியூட்டர் முதற்கொண்டு எல்லாவற்றையும் எடுத்து செல்ல வேண்டி இருந்தது. வழியில் வந்த ஒரு ஆட்டோவில் அனைத்தையும் ஏற்றிக்கொண்டு ஆபிஸ் உதவி அங்கிளுக்கு நன்றி சொல்லிவிட்டு ஆட்டோவை எடுக்க சொன்னாள்.

இருட்டிய வானம் மழைக்கு அறிகுறியாக இருந்ததால் ஆட்டோவின் பக்க திரைச்சீலைகள் இரண்டையும் இறக்கி விட திரும்பினான் ஆட்டோக்காரன். கட்டாயம் இறக்க வேண்டுமா ? எனக் கேட்டாள்.

அவன் முகத்தில் ஒருவித எதிர்ப்பு தொனித்தது போல் இருந்தது இவளுக்கு. “பயப்படாதீங்கம்மா, உள்ள இருக்கிறதெல்லாம் எலக்ட்ரிக் சாமானா இருக்கு, தண்ணி பட்டா அநியாயம்னு சொன்னேன்” என புலம்பினான்.

எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல, மழை இருட்டின வானம் அழகா இருக்கு அதால பார்த்துட்டு வர கேட்டேன், மழை வந்தா நான் மூடுறேன் என்றாள். நான் ஏன் பயப்படணும் என இவள் மனது சொல்லியது.

அந்த முகச்சுளிப்புடன் பயணம் தொடங்கியது.

ஏற்கனவே பலநாளாக பயணத்தடை விதித்திருந்ததால், ஒப்பீட்டளவில் வெறிச்கோடி இருந்த பாதைகள் ஆட்டோக்காரனின் வேகத்துக்கு விருந்தானது. “மீட்டர் ஓன் பண்ணல” என்றாள். “மீட்டர் ஒடஞ்சிருக்கு” வழக்கமான அதே பதில். இவளுக்கு கோவம் உச்சிக்கு வந்து விட்டது. ஏதாவது திட்ட வேண்டும் என்று மட்டுமே நினைத்திருந்தாள். திட்டிவிட்டாள்.

டுடும் டம் டும்ட டும்மம்டுடம்……

என்ன சொன்னீங்க ?

எதுவுமில்லை. இடியின் சப்தத்தில் தான் திட்டியது கேட்காமல் போனதால் கொஞ்சம் கோபமும் குறைந்து நிம்மதியாக இருந்தாள். அதே நேரம் கொட்டி தீர்க்க ஆரம்பித்தது மழை. அவளை ,முன் கண்ணாடி வழியாக பார்க்க ஆரம்பித்தான் ஆட்டோ ஓட்டுநர். அவளும் திரைகளை மூடினாள். ஏற்கனவே இருந்த இருளுக்குள் இது கும்மிருளாக மாறியது.

ஒன்றரை மணிநேர வெறுமைக்கு பிறகு 7.00 க்கு கும்மிருளில் இடிமழைக்குள் முக்கிய பாதைகளை தாண்டி, அவள் புதிதாக குடி புகுந்த வீடிருக்கும் பக்கமாக பாலத்துக்கு முன்னுள்ள சந்திக்கு வந்தது ஆட்டோ. இனி நடமாட்டத்துக்கு ஆளுமில்லை, அதிக தூரமுமில்லை.

அவள் வீட்டுக்கு முன் உள்ள சந்தியின் பெயர்தான் தெரியும் என்பதால் அதனை சொல்லியிருந்தாள், அங்கு வந்த ஓட்டுநர் அடுத்து எங்க ? என்று கேட்டான். முன்னால் இரண்டு சாலைகள் இருந்தது. குறுக்க ஓடும் ஆற்றைக் கடக்க இரண்டிலுமே பாலங்கள் இருக்கும். இருட்டுக்குள் தேடிப் பார்த்து, ஆஹ் அந்த ஹுவான் முகாம் சந்தி 12 னு போர்ட் போட்டிருக்க லேன் என சொல்லிவிட்டு காசு கொடுக்க குனிந்து பர்ஸை எடுத்தாள். எனக்கு சைனீஸ் படிக்க தெரியாது என்றான். ஆஹ் வலது பக்கம் பாலம் தாண்டி கொஞ்ச தூரத்துல முதலாவது லேனில வார 3 ஆவது வீடு என்று குனிந்தபடி சொன்னாள்.

500 மீட்டரில் வீடு. ஆனால் அடர்ந்திருந்த மரங்கள், புயலால் வேலை செய்யாமல் போன தெருவிளக்குகள் என்பன பாதையை கும்மிருட்டாக்கி இருந்தன, இதோடு அழுகிய நீரோடையின் மேல் பாலம் என்பது தூரத்தைக் கூட்டிக் காட்யது. பாலத்தின் மீது ஆட்டோ பயணிக்க தொடங்கியது.

பியூ…..ஷ்..

ஆட்டோ நின்று விட்டது. அடச்சீ.. ஆயிரம் ஆட்டோ போயும் சரியா இதுல வந்து மாட்டிக் கொண்டோமே என யோசித்தாள். ஆட்டோக் காரன் அவளை நோக்கி திரும்பினான். எங்கிருந்தோ திடீரென்று பயம் வந்து ஊறிக் கொண்டது. இறங்கி பின் பக்கம் போய் பார்க்க போனான். இவள் அந்த இடைவெளியில் சுற்றும் முற்றும் பார்த்தாள். பாலத்துக்கு நடுவில் வாகனம், சுற்றி மனிதர்கள் இருக்கவில்லை, அந்த நேரத்திலென்று தொலைபேசியை எடுக்க அவள் மனம் யோசிக்கவில்லை. அவன் ஏதோ பின்னால் பார்த்து விட்டு ஆட்டோவின் திரைச்சீலை ஸிப்பை மூடினான். இவள் பயத்தில் அதைக் கவனிக்கவில்லை. முன்னால் வந்து அமர்ந்து திரும்பி ஆட்டோ சாவியை திருப்பினான்.

மீண்டும் பின்னால் திரும்பினான். அவனது ஒரு கை, அவன் பாண்ட் பாக்கெட்டுக்குள் செல்வது இவளுக்கு தெரிந்தது. இவள் மூளை தான் கடத்தப்பட்டு விட்டேன் என உறைந்து விட்டது. அந்த ஒரு சிந்தனையில் உடனடியாக, ஐயோ எப்படி தப்பிப்பேன், ஆபீஸ் கம்பியூட்டர், மொனிட்டர் எல்லாம் மிரட்டி கேட்டா எப்படி காப்பாத்துவேன், வெளில மழையா வேற இருக்கே இதெல்லாம் தூக்கிட்டு பாலத்தை தாண்டி ஓடவும் முடியாதே, ஆட்களும் இல்ல.. என்ன செய்வேன் என நினைக்க அழுகை வந்து விட்டது. என்னவென்றாலும் எதிர்த்து போராடுவேன் என நினைக்க கண் கலங்கியது. முன்னாலிருந்தவை மறைந்தன. அவன் கையில் எடுத்த பொருளை இவளை நோக்கி நீட்டி இவள் வயிற்றுக்கு நேராக கொண்டு வருவது தெரிந்தது.

உறைந்து போனாள்……

திடீரென வெளிச்சம், கண் கூசியது. திறக்க முடியவில்லை.

பழைய நோக்கியா போனின் மேலிருக்கும் டார்ச்சை பிடித்தபடி, அவளது கால்களுக்கு பின்னாலிருக்கும் பெட்ரோல் திருகியை பார்த்தான். அதனை ரிசர்வுக்கு திருப்பினான்.

ஒரு நொடியில் வாழ்க்கையே போனதென்று இருந்தவளுக்கு, நெஞ்சிலிருந்து ஒரு பெரிய மலையை இறக்கி வைத்தாற் போல ஆகி விட்டது. வியர்த்து வெளிறி போய் இருந்த இவளை பார்த்து யோசித்து விட்டு, ஆட்டோக்காரன் முன்னால் திரும்பி ஆட்டோவை ஸ்டார்ட் செய்தான் .

ற்றீங்க...கி..ஏ ..ரிங்

வண்டி ஸ்டார்ட் ஆகி விட்டது. வைப்பரை மீண்டும் போட்டு விட்டு ஒடத் தொடங்கினான். இவளுக்குள் வந்த பயம் மற்றும் முற்றிலும் ஆட்கொண்ட அந்த சிந்தனை விலக சில நிமிடங்கள் ஆனது. தினமும் வீடு போனதும் அம்மாவுக்கு அனுப்பும் "வந்துவிட்டேன் அம்மா" செய்தியை இப்போதே அனுப்பினாள். கொஞ்சம் மனம் தேறியது.

வீட்டு வாசல் வந்ததும் ஆட்டோ உள்ளே வைத்தே காசைக் கொடுத்து விட்டு குடையை விரித்து கழுத்திலும் தோளிலும் பிடித்துக் கொண்டு இரண்டு கைகளாலும் கம்பியூட்டரை எடுக்க போனாள்.

இருங்கம்மா, நான் கொண்டு வந்து தாரேன் என்றான். இந்த நேரத்தில் உதவியை மறுக்காமல் ஏற்றாள். ஆனால் தான் தனியாக வீட்டிலிருப்பது தெரியாக் கூடாது என்பதற்காக கேட்டில் வைத்து விடுங்கள் போதும் என்று சொல்லி மொனிட்டரை அவர் கையில் கொடுத்தாள். மீண்டும் திரையை வெளியே இறங்கி விட்டு, குடையை கழுத்தில் வைத்து, கம்பியூட்டரை தூக்கி வெளியில் வந்தாள், ஆட்டோவைச் சுற்றி மற்றப்பக்கம் நடந்தாள். மொனிட்டரை வைக்க வேண்டிய மனிதனைக் காணவில்லை.

அந்த 5 செக்கனில் திருடிக் கொண்டு ஓடி விட்டானா ? ஆட்டோவை விட்டு விட்டா ? எங்கே போயிருப்பான் இவன் என்று தேடிக் கொண்டே முன்னால் வந்தாள். காணவில்லை. கேட் திறந்திருந்தது. சரி வீட்டுக்குள் பார்ப்போம் என்று யோசித்தால் வீடு இவளது இல்லை. இவளுக்கு தலை சுற்றியது. எங்கே இறக்கி இருக்கிறான். இந்த புது இடத்தில் எல்லாமே ஒரே மாதிரி இருக்கு என குழம்பி முதலாவது வேலையாக கம்பியூட்டரைக் கீழே வைத்தாள். தான் இறங்கி இருக்கும் வீட்டு பெல்லை அடித்தாள். கொஞ்ச நேரத்தில் ஒரு பெண் வந்து கதவைத் திறந்தாள்.

“தொடரும் 13 ஆம் சந்தி மர்மங்கள். ஹுவான் முகாம் சந்தி 13 இல் உள்ள பாலத்தில் ஆளில்லாமல் கிடந்த ஆட்டோ, ஓடைக்குள் ஆட்டோவின் சாரதி உடல் மீட்பு. 500 மீட்டர் தொலைவிலேயே, தற்கொலை விசாரணைக்காக பூட்டியிருக்கும் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பக்கத்து தெருவில் வசிக்கும் இளம்பெண் சடலமாக மீட்பு”

முழுமையான வாசிக்க பாகம் 2 க்கு காத்திருக்க...